உலகளவில் அதிகரிக்கும் ராணுவ செலவுகள்… மூன்றாவது இடத்தில் இந்தியா!

Indian Military at 3rd Positionஅமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா

`Stockholm International Peace Research Institute’ என்கிற ஆய்வு நிறுவனம். உலகம் முழுவதும் ராணுவத்துக்கான செலவு செய்யப்படுகிற தொகையை ஆய்வு செய்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சீனாவும் இந்தியாவும் முதல்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளன.

2019-ம் ஆண்டு மட்டும் உலக அளவில் 1,917 பில்லியன் அமெரிக்கா டாலர் ராணுவத்துக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 19,17,000 கோடி அமெரிக்க டாலர். 19,17,000 என்பதுடன் கோடிக்கான ஏழு இலக்கங்களைச் சேர்த்து. அந்தத் தொகையை அமெரிக்க டாலர் மதிப்புடன் பெருக்க வேண்டும். கணக்கிடுவதற்குள்ளே தலை சுற்றிவிடுவதை உணர முடிகிறது. ஊதியம், ஓய்வூதியம், ஆயுதங்கள், பராமரிப்புகள் என ராணுவம் தொடர்பாக செலவுகள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன
சர்வதேச அளவில் ஆகும் ராணுவ செலவுகளில் 38% அமெரிக்கா மட்டுமே செய்கிறது. இதில் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் ஆயுதம், ராணுவ நிதியுதவிகளும் அடக்கம். டொனால்டு ட்ரம்ப் அதிபர் ஆனதிலிருந்தே தான் பயணம் செய்யும் நாடுகளுடன் எல்லாம் ராணுவ ஒப்பந்தங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ட்ரம்ப்பின் இந்தியா வருகையின் போதும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையொப்பமிடும் என அறிவிக்கப்பட்டது.

சீனாவின் நிலை

சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் ராணுவ செலவுகளும் ஒரே சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் சீனா முழு வீச்சில் உள்ளது. இதனால் தென் சீனக் கடல் பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கும் சீனாவுக்குமான மோதல் அதிகரித்துள்ளது. தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சீனா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. சீனா போன்ற பொருளாதார மற்றும் ராணுவ வலு கொண்ட தேசத்தால் மட்டுமே சர்வதேச தீர்ப்புகள் சட்டை செய்யாமல் இருக்க முடியும். மேலும், சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா தன்னை முன்னிறுத்தி வருகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல், தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் ஆதிக்கம் ஆகியவையே சீனாவின் செலவுகள் அதிகரித்து வருவதற்கான காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இந்தியாவின் ராணுவ செலவுகள் குறித்து பாதுகாப்பு நிபுணரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான ஹரிஹரனிடம் பேசினோம், “இந்திய அரசு நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது தான் ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்தி வருகிறது. மேலும், சீனாவும் பாகிஸ்தானும் தற்போது ஓர் உடன்படிக்கையில் வந்திருக்கின்றன. இனி இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் எந்த அச்சுறுத்தல் என்றாலும் அதில் சீனாவின் பங்கும் கணிசமானதாக இருக்கும். அதனால் இந்தியா தன்னுடைய ராணுவ சேவைகளை மேம்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. ராணுவ செலவுகள் அதிகரிப்பதற்கும் இதுவே காரணம். இறையாண்மை உள்ள எந்தவொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது அவசியம். ராணுவ செலவுகள் உலகளவிலே அதிகரித்திருக்கிறது. இது இந்தியாவில் மட்டும் இல்லை” என்றார்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சவுதி அரேபியாவின் ராணுவ செலவுகளின் விகிதாசாரம் குறைந்திருந்தாலும் உலகளவில் அதிகம் செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. சவுதி அரேபியா தன்னுடைய ராணுவ தேவைகளைப் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகிறது. மேலும், ஏமன் நாட்டில் நடைபெற்று வருகிற உள்நாட்டுப் போரிலும் சவுதி அரேபியா, அமெரிக்கா உதவியுடன் நேரடியாகப் பங்கெடுத்து வருகிறது. இதுவும் சவுதி ராணுவ செலவுகளுக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், கொரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், ராணுவத்துக்குச் செய்யப்படுகிற செலவுகள் குறையலாம் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிற நாடுகள் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற குரல்கள் வலுவாக எழத் தொடங்கியுள்ளன. இதற்கு அமெரிக்காவே மிகச் சிறந்த உதாரணம்.

சுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் நாடு

ராணுவத்துக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் சுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் நாடும் அமெரிக்காதான். அமெரிக்கா தன்னுடைய ஜிடிபியில் 18% மருத்துவத்துக்குச் செலவு செய்கிறது. எங்களிடம் இல்லாத ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் இல்லை என ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், மருத்துவர்களுக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள், மருந்துகளுக்குக்கூட பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. மற்ற எந்த நாடுகளை விடவும் சுகாதாரத்துக்கும் அதிகம் செலவு செய்யும் அமெரிக்கா ஏன் இத்தகைய பேரழிவை எதிர்கொண்டு வருகிறது என்கிற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

மற்ற நாடுகளிடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் கடமைதான். கொரோனா போன்ற நோய், சர்வதேச நெருக்கடி பேதமில்லாமல் அனைவரையும் பாதித்திருக்கிறது. ஆனால், அதற்கான விலையை சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களே அதிகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நோய்த் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா இன்னும் சில காலத்துக்கு நம்முடன்தான் இருக்கப்போகிறது என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள நீண்ட கால நோக்கில் தயாராக வேண்டும் என உலக நாடுகளுக்கு WHO அறிவுறுத்தி வருகிறது. இத்தகைய நிலையில் உலக நாடுகள் சுகாதாரத்துக்கும் எதிர்வரக்கூடிய பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்பட வேண்டும் என்கிற குரல்களும் எழுகின்றன.Daily Current Affairs Question and Answer

1 thought on “உலகளவில் அதிகரிக்கும் ராணுவ செலவுகள்… மூன்றாவது இடத்தில் இந்தியா!”

Leave a Comment