அண்ணா – Anna
பொங்கல் திருநாளில் தம்பிக்கு அண்ணாவின் கடிதம்
- சென்ற ஆண்ட பொங்கற் புதுநாளன்று உன்பக்கம் நின்றிடவும் பரிவினைப் பெற்று மகிழ்ந்திடவும் இல்லந்தனிலே புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு கனிமொழி பேசி நீ களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே இருந்தேன். அங்ஙனம் இருந்து வந்த என்னை, அதிலே பெறும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்று எண்ணம் கொண்ட என்னைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் ஒரு பீடத்தில் அமர்த்தி விட்டாய். நற்காலம் பொற்காலம் என்றெல்லாம் மகிழ்கின்றாய். நானும் என்னாலான அளவுக்கு உன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நடந்து கொள்வதில் முற்பட்டிருக்கிறேன்.
- ஒன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னல்களுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும் இந்தப் பொங்கற் புதுநாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு. நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறது. இந்நாளே தமிழர் வாழ்ந்த நேர்த்தி பற்றிய நினைவு எழுகிறது. “உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்த பெறு! என்று நிலமடந்தை நமக்கு ஆணையிடுகிறாள்.
- தமிழர் திருநாள் தை முதல் நாளாம்
அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்” – என்று முடியரசன் முழங்குகிறார். இத்தகு திருநாளன்று என்னால் இயன்ற அளவு கருத்து விருந்து அளித்துள்ளேன். காஞ்சி இதழ் மூலம் மற்றவருடன் இதனையும் பெற்று மகிழ்ந்திருப்பாய்