முத்துலெட்சுமி ரெட்டி படிக்கும் போதே சிறப்புற விளங்கினார். ஆண்கள் மட்டுமே படித்த புதுக்கோட்டை கல்லூரியில் முதன் முதல் இடம் பெற்ற ஒரே மாணவி ஆவார்.
இவர் பள்ளிப் பருவத்தில் இயல்பாக நீதி நியாயங்களை நாட்டுவதில் ஆர்வமும், இரக்க உணர்வும், மனித நேயமும் கொண்டு, ஒரு நல்ல பண்பாளராக திகழந்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியல் 1912-ம் ஆண்டில் மருத்துவராக பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் ஆவார்.
அக்கால ஆங்கிலேய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை சட்டமன்றத்தில் இடம் பெற்று நியமிக்கப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாகவும், பின்னர் அந்த சட்ட மன்றத்தின் துணைத் தலைவராகவும் விளங்கிச் சிறப்பாக கடமையாற்றியவரும், ஆடவரைப் போன்று மகளிருக்கும் வாக்குரிமையும், சொத்துரிமையும் அளிக்க வேண்டும் என்று கேட்டவரும் இவரே.
அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராகவும், சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாகவும் இவர் தேர்வு செய்யப்பட்டு பலரும் பராட்டுமாறு பணி செய்தார். கொடிய புற்றுநோயால் துன்புற்று மடியும் மகளிர் வேதனை துடைக்க இலண்டனில் இருந்த ராயல் புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்கு வழங்கும் சிகிச்சை முறையை படித்து வந்து சென்னை அடையாற்றில ஒரு புற்றுநோய் மருத்துவமனையை 1949-ல் துவங்கியதன் மூலம் மகளிர் குலத்துக்கு அரும்பணி ஆற்றினாார்.
இன்றும் அந்த மருத்துவமனை பெரும் வளர்ச்சியுற்று அவரது பேரும் புகழும் விளங்கச் செயற்படுகிறது. தாம்பரத்தில் அரசு உதவியுடன் மகளிர் புனர்வாழ்வு இல்லம் ஒன்றை துவங்க வழி செய்தார். சிறு வயதினர் திருமணச் தடைச் சட்டம் கொண்டு வரச்செய்தார். 1929-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தேவதாசி ஒழிப்பில் ஆர்வர் கொண்டிருந்தார். இதன் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி சட்டத்தை நிறைவேற்றியது.
1930-ம் ஆண்டு பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். 1933 முதல் 1947 வரை இடையில் இருவருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத்தின் தலைவியாக இருந்தார். கைவிடப்பட்ட அபலைப் பெண்களை காத்திட 1930-ம் ஆண்டில் அடையாற்றில் “அவ்வை இல்லம்” என்ற அடைக்கநல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். தற்சமயம் இவ்வில்லம் சென்னை அடையாற்றில் செயல்பட்டு வருகிறது.
இலட்சிய வேட்கை கொண்ட எந்த பெண்ணுக்கும் தோல்வி இல்லை என்பதை வாழந்து நிருபித்த் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி 1968-ம் ஆண்டு தனது 82-வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.