ஓரெழுத்து ஒரு மொழி
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி (Oru Eluthu Oru Mozhi) என்பர்
உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
உயிர் எழுத்து | ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ |
மகர வரிசை | மா, மீ, மூ, மே, மே, மோ |
தகர வரிசை | தா, தீ, தூ, தே, தை |
பகர வரிசை | பா, பூ, பே, பை, போ |
நகர வரிசை | நா, நீ, நே, நை, நோ |
ககர வரிசை | கா, கூ, கை, கோ |
சகர வரிசை | சா, சீ, சே, சோ |
வகர வரிசை | வா, வீ, வை, வெள |
யகர வரிசை | யா |
குறில் எழுத்து | நொ, து |
தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார்.
பூ-யா சொற்கள்
“பூ” என்பது ஓரெழுத்து ஒரு மொழி. “கா” என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து “பூங்கா” எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!
ஆ சொல்
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்.
மா சொல்
மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
ஈ-காரச் சொல்
ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
கால மாற்றத்தில் கரைந்தவை
இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
ஏகாரச் சொல்
எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும் அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
முடிவுரை
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில் கனியாகக் காட்டும்.
நன்னூல் என்னும் இலக்கண நூல் எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரணடு சொற்களைத் தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
ஓரெழுத்து ஒரு மொழி | பொருள் |
ஆ | பசு |
ஈ | கொடு |
ஊ | இறைச்சி |
ஏ | அம்பு |
ஐ | தலைவன் |
ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
கா | சோலை |
கூ | பூமி |
கை | ஒழுக்கம் |
கோ | அரசன் |
சா | இறந்துபோ |
சீ | இகழ்ச்சி |
சே | உயர்வு |
சோ | மதில் |
தா | கொடு |
தீ | நெருப்பு |
தூ | தூய்மை |
தே | கடவுள் |
தை | தைத்தல |
நா | நாவு |
நீ | முன்னிலை ஒருமை |
நே | அன்பு |
நை | இழிவு |
நோ | வறுமை |
பா | பாடல் |
பூ | மலர் |
பே | மேகம் |
பை | இளமை |
போ | செல் |
மா | மாமரம் |
மீ | வான் |
மூ | மூப்பு |
மே | அன்பு |
மை | அஞ்சனம் |
மோ | முகத்தல் |
யா | அகலம் |
வா | அழைத்தல் |
வீ | மலர் |
வை | புல் |
வெள | கவர் |
நொ | நோய் |
து | உண் |