தமிழர் வணிகம் – தொல்லியல் – கடற்பயணம் – Tamilar Vanigam – Tholiyal – Kadarpayanam
- தொல்லியல் ; தொல்பழங்காலத்தை பற்றி ஆய் செய்தலையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்கிறோம். தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவை பற்றி அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களான கல்வெட்டுகள், கட்டங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியவற்றின் அடிப்படையில் ஆய்ந்தறிதலே தொல்லியலின் முதன்மையான நோக்கம்.
- தொல்லியலை ஆங்கிலத்தில் ‘ஆர்க்கியாலஜி’ எனக் குறிப்பிடுவர். தொல்லியல் ஆய்வு இன்றேல், மனிதன் கடந்து வந்த பாதையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது. திருவண்ணாமலையில் கி.பி.13-ம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற கல்வெட்டு, அக்கல்வெட்டு வரிகள், சங்ககால மன்னன் நன்னனையும் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார் பாடிய மலைபடுகடாம் நூலையும் குறிக்கின்றன.
“நல்லிசைக் கடாம்புனை நன்னனை வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய
அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்”
- மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த காவிரிபூம்பட்டினம் ஒரு துறைமுக நகரம். இது சோழர்களின் கடற்கரை நகரம். இந்நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்திய தொல்லியல் துறையினர் 1963-ம் ஆண்டு பூம்புகார் அருகில் உள்ள கீழார் வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இதன் ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை, அரை வட்ட வடிவ நீர்தேக்கம், புத்தவிஹாரம் (புத்த பிக்குகள் தங்குமடிடம்) வெண்கலத்தாலான புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
- இவை பண்டைய காவிர்ப்பூம்பட்டின மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என்பதும் காவிரிபூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்தது என்பது வலுவான சான்றுகளுடன் மெய்பிக்கப்பட்டுள்ளன. காவிப்பூம்பட்டினம் என்ற ஒரு நகரம் இருந்தது. என்பதற்கு அங்கே கிடைத்த தடயங்கள் தாம் காரணமாக இருந்தன.
- காவிரிப்பூம்பட்டினத்தில் கிடைத்துள்ள புத்தர் சிலை, தூண் போன்றவற்றைக் கொண்டு, அங்கு வாழ்ந்த மக்களில் சிலர் புத்த சமயத்தைப் பின்பற்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களினால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் ஒரு பக்கத்திலோ ஒரு பக்கங்களிலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம், கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
- ஒரு நாட்டின் பழமையான இலக்கியங்கள் அகழகாய்விற்குரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தின் சிற்றூர்கள், நகரங்கள், துறைமுகங்கள், கோட்டைகள், அரண்மனைகள் முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காண்ப்படும். அவற்றின் துணை கொண்டு அகழாய்வு செய்வதற்கான இடங்களை முடிவு செய்கின்றனர்.
- பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே முதுமக்கள் தாழிகள் என்கிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்திலான நெற்றிப்பட்டம், செம்பிலான ஆண், பெண் தெய்வ உருவங்கள் மற்றும் இரும்பிலான கத்திகள், விளக்கு தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.
- கடற்பயணம் : தமிழ்நாடு வணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் ஒளவை மொழியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னுமும் கணியன் பூங்குன்றன் மொழியும், தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும். தொல்காப்பியத்தில் அதற்கு முன் வாழ்ந்த தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது. பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகவே கருதினர்.
- இதனைத் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. இப்பிரிவு காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு. கலத்தில் (நீர்வழிப்பிரிதல்) பிரிவு என இரு வகைப்படும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் மேற்கே கீரிசு, உரோம், எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகள் தமிழரின் பொருள்களை விரும்பிப் பெற்றன. ஏலமும், இலவங்கமும் இஞ்சியும், மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.
- அவற்றுள், முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் குறிப்பிடத்தக்கன. தமிழர் கிரேக்கரையும், உரோமானியரையும் யவனர் என அழைத்தனர். கலம் செய், கமியர் என ஒரு வகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர். அவர்களால் பெருங்கப்பல்கள் அக்காலத்தில் கட்டப்பட்டன. ஒவ்வொரு பெரியகப்பலும் மதில் சூழ்ந்த ஒரு மாளிகை போலத் தோன்றுமாம். நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதந நில அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாக புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
- ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி என்பவை கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். இவ்வாேற மரக்கலத்துக்கும் தமிழ் மொழியில் பல பெயர்கள் வழங்குகின்றன. அவை : கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும். இச்சொற்களை கொண்டே பண்டைத் தமிழர்களின் கடற்பயணம் பற்றித் தெளிவாக அறியலாம். உப்பங்கழிகளில் செலுத்துதற்குரிய சிறிய படகுகளும் கடலில் செலுத்துவதற்குரிய பெரிய நாவாய்களும் அன்றிருந்தன. கடலில் செல்லும் பெரியகப்பல் நாவாய் எனப்படும். புகார் நகரத்தில் நிறுத்தம்பட்ட நாவாய்கள் அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போல அசைந்தன. அவற்றில் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. நாவாய்கள் காற்றின் துணை கொண்டே இயங்கின. கரிகாலன் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
- தமிழகத்தில் நடைபெற்று வந்த வணிகத்தின் பல துறைமுகங்கள் கடற்கரை பட்டினங்களாகச் சிறந்து விளங்கின. அவற்றுள் காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகியவை குறிப்பிடத்தக்கன. முசிறி சேர மன்னர்க்குரிய துறைமுகம். அங்குச் சுள்ளி என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன. அக்கலங்களுக்கு உரிய யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர். இச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.
- பாண்டிய நாட்டின் வளம் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச்சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ குறித்துள்ளார். இங்குச் சங்ககாலத்தும் முத்துக்குளித்ததல் நடந்தது. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும், சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தினைச் சிறப்பிக்கின்றன. விளைந்து முதிரந்த விழமுத்து என மதுரைக்காஞசி கூறும் சோழ நாட்டின் துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். பட்டினப்பாக்கம் என்பது கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர். அங்கே பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள். அங்குச் சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.
- இங்குக் கப்பலிலிருந்து நிலத்தில் இறக்கப்படுவனவும் நிலத்திலிருந்து கப்பல் ஏற்றப்படுவனவுமாகிய அளவில்லாத பண்டங்கள் முன்றில் மலை போலக் கிடக்கும். காவிப்பூம்பட்டினத்து மாடங்களில் உள்ள மகளிர் கைகளைக் கூப்பி, வெளியாடும் மகளிரோடு பெருந்தி வேய்குழல் முதலியவற்றை வாசிக்க நகர் விழாக்கோலம் கொண்டது. தெய்வத்திற்காக எடுத்த கொடிகளும், விலைப்பண்டங்களை அறிவித்ததற்குக் கட்டிய கொடிகளும் ஆசிரியர்கள் வாது செய்யக் கருதி வைத்த கொடிகளும், கப்பலின் கூம்பிலுள்ள கொடிகளும் அங்கு கலந்து காணப்பட்டன.
- அருகில் கடல் வழியே குதிரைகளும், நிலத்தின் வழியே வந்த மிளகுப் பொதிகளும், இமயத்திலுண்டான மணிகளும் பொன்னும், குடகு மலையிற் பிறந்த முத்தும், கீழ்க்கடலில் உண்டான பவளமும், கங்கையில் உண்டான பொருள்களும், காவிரியில் உண்டான வளங்களும், ஈழ நாட்டிலிருந்து வந்த உணவுப் பொருட்களும், பிற அரிய பொருள்களும் கூடி வளம் மிகுந்த பரந்த இடத்தையுடைய தெருக்களாக விளங்கின.
- பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்கள் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காள் இலவங்கப்பட்டை இஞ்சி முதலானவை குறிப்பிடத்தக்கன.
- தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும், சர்க்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின. கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது. கடற்பயணம் கல்வியறிவு இந்நாளில் மக்களை எட்டியுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக் கல்வி கற்பிக்கப் பெற்று வருகிறது. இத்துறையில் பயில்வோருக்குப் பயிற்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. எனவே இந்நாளில் “மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்னும் பாரதியின் கனவு நனவாகி உள்ளது.
கடல் கடந்த தமிழ்
தமிழ் | கிரேக்கம் |
அரிசி | ஒரைஸா |
கருவூர் | கரோரா |
காவிரி | கபிரில் |
குமரி | கொமாரி |
சோபட்டினம் | சோபட்னா |
தொண்டி | திண்டிஸ் |
மதுரை | மதோரா |
முசிறி | முசிரில் |
- தமிழர் வணிகம் ; பழந்தமிழ் நாட்டில் வாணிகம் வளர்ந்திருக்கிறது. தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள். பொருள் தேடுவது ஒன்றனையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். அவர்கள் கொள்வது மிகைகொளாது. கொடுப்பது குறைபடாது வாணிகம் செய்தார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்லும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து கடலை, அவரை துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பயிறு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
- கடல் வாணிகத்தில் தமிழர்கள் சிறந்திருந்தனர். பொன்னும், மணியும், முத்தும், துகியலும் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர். பண்டைத் தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் பலவிருந்தன. பூம்புகார் முதலான பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன.
- கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும் சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. கி.மு. 10 நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பட்டன. தமிழர்களுக்குச் சர்வ நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு இருந்தது.
தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம், மாற்றம்