“தமிழ்தாத்தா” என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் “உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்” (உ.வே.சா) என்பவராவார்.
இவர் திருவாரூரில் 19.02.1855-ம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் “வேங்கடரத்தினம்”. இவரின் ஆசரியர் மீனாட்சி சுந்தரம் இவருக்கு இட்ட பெயர் “சாமிநாதன்”
அக்காலத்தில் பனையோலையைப் பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவார்கள். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர். உ.வே.சா. அவர்கள் அப்படி எழுதப்பட்ட சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாசித்து நமக்காக தாளில் எழுதி அச்சிட்டு புத்தகமாக வழங்கினார். நாம் அவ்விலக்கியங்களை படிப்பதற்காக ஓய்வின்றி உழைத்தார். அதனால் அவரை “தமிழ் தாத்தா உ.வே.சா.” என்று அன்போடும் உரிமையோடு அழைக்கின்றோம்
தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார். அது “என் சரிதம்” என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப் சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
உ.வே.சா அவர்களின் பெயரால் 1942-ல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்கள் என்றும் தமிழர்களிடையே பெரும் மதிப்பும் வரவேற்பும் இருக்கும். நடுவண் அரசு, உ.வே.சா அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் 2006-ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்து உள்ளது.